புதிய யாப்பு திருத்தம்.

14.08.2026 08:17:32

“அரசாங்கம் தற்போதுவரையில் கடந்துவந்த பயணத்தை தொடர்ந்து செல்வதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் மீண்டும் சிந்தித்து தேவையான தீர்மானங்களை எடுப்பார்களென்று நம்புகிறோம். எங்களின் யோசனைகளை எதிர்ப்பார்களாக இருந்தால் இதனை விட கடுமையாக, வரையறைக்குள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய எங்களால் முடிந்த சகலதையும் செய்வோம். எங்களின் கருத்துகளைக் கேட்காமல் அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமாக இருந்தால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான சந்திப்பொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கும் இடையில் கொழும்பில் நேற்று (13) இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இதுகுறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 

‘‘ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்திருந்தோம். ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப் பாட்டையும் கருத்தையும் வெளிப் படுத்தியிருந்தார். அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஏதாவதொரு அடிப்படை இருக்கவேண்டும்.

 

சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில் இந்த திருத்தத்தை முழுமையான எதிர்க்கிறோம். அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம். அதேபோன்று நாங்கள் சகலரும் மக்களின் பக்கமே இருக்கிறோம். இந்தத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் மாத்திரமே உறுதியாக இருக்கிறது.

 

ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் சிந்தித்து தேவையான தீர்மானங்களை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போதைய சந்தர்ப்பத்தில் இரு அவசியமற்றவொன்றாகும். இந்த சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எங்களின் யோசனைகளை முன்வைத்தோம். தீர்மானத்தின் பின்னரே ஜனாதிபதியை சந்தித்துள்ளோம். ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியிருந்தபோதும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

 

நாட்டுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் உண்மையில் அது நாட்டுக்கான செயற்பாடாக இருக்கவேண்டும். அவசர அவசரமான நடவடிக்கைகளை ஓரங்கட்டிவிட்டு நாட்டுக்காக சாதகமான தீர்மானமொன்றுக்கு வரவேண்டும். இந்தத் திருத்தம் நாட்டுக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமற்றது என்பதே எங்களின் நிலைப்பாடும். கருப்புக் கறையை உருவாக்கம் நீதிமன்ற சுயாதீனத் தன்மை தொடர்பில் பாரிய சந்தேகம் உருவாகும். நாட்டின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தத் தீர்மானம் தொடர்பில் மீண்டும் சிந்திக்குமாறு கோரியுள்ளோம்.

 

தற்போதுவரையில் அரசாங்கம் வந்த பயணத்தை தொடர்ந்து கொண்டு செல்வதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இருந்தபோதும் நாங்கள் எதிர்பார்க்கும் பரந்துபட்ட நிபுணத்துவமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென்று தற்போதும் நம்புகிறோம்.

 

மக்களுக்காக நன்மையான விடயமொன்றை செய்கிறோமென்றால் வெளிப்படையாக சகலரது கருத்தையும் பெற்று ஒரு நடுநிலையான தீர்மானத்தை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) வரை ஒரு பக்கத்தில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் இன்னுமொரு பக்கமும் இருக்கிறது. இந்த விடயத்தில் எந்தப் போராட்டமும் இல்லை. ஆனால் எதிர்ப்பை தெரிவிப்போம். இந்த விடயத்தில் சிறந்த தீர்மானத்துக்கு வரமுடியும். எங்கள் கையில் ஒன்றுமில்லை. எங்களிடம் ஆட்சி பலமோ பாராளுமன்ற பலமோ இல்லை. மக்களே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். சாதகமான தீர்மானமொன்றை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

 

எங்களின் யோசனைகளை எதிர்ப்பார்களாக இருந்தால் இதனை விட கடுமையாக, எங்களில் வரைறைக்குள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய எங்களால் முடிந்த சகலவற்றையும் நாங்கள் செய்வோம். எங்களின் கருத்துகளை கேட்காமல் அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமாக இருந்தால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.

 

இதனூடாக உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கும் ஒரு நலன் கிடைக்கிறது. காரணம் அவர்களின் ஓய்வு வயதெல்லை அதிகரிக்கிறது. அவர்களையும் சிக்கலுக்குள்ளாக்காமல் அமைச்சரவையினூடாக நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்புக் குறித்தே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் சட்டத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும்.

 

புதிய அரசியலமைப்பு கொண்டுவரும் போது இதுதொடர்பில் பரந்துபட்டளவுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பொறுமையாக செய்ய முடியும். இந்த புதிய திருத்தம் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதொன்று இல்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்கு வேறு எதிர்பார்த்து எதுவும் இல்லை’’ என்றார்.