லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!

29.10.2025 14:17:33

2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள்.

உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது.

பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும்.

அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன.

தூரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் மாத்திரம் பாதையை விட்டு விலகி அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவருடன் இணைந்த வகையில் நிறுத்தப்படுகிறது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்து அலாரம் ஒலி கேக்க அங்கிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றனர்.

பொலிஸார் , தீயணைப்பு படையினர் என அந்த இடமே பரபரப்பானது.

இதை அடுத்து நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

அப்படி அங்கு என்ன நடந்தது?

அது என்ன கட்டிடம்?

ஏன் இந்த விடயம் உலகம் முழுவது இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது?

உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பெறுமதியான பல பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்கட்சியம்தான் பிரான்ஸ் தலைநகர் பேரிசில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகம்.

கடந்த 19 ஆம் திகதி இங்கு ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த செய்தி தீயாக உலகமெங்கும் பரவியது.

 

லூவர் அருங்காட்சியகம் ஏன் இவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது,

கி.பி 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் பிலிப் எனும் மன்னன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒரு மிகப்பெரிய கோட்டையை உருவாக்குக்கிறார்.

ஆனால் அவருக்கு பின்னர் வந்த மன்னர்கள் அந்த கோட்டையை இடித்து மிகப்பெரிய மாளிகையை அந்த இடத்தில் உருவாக்குகின்றனர்.

அரசர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்ட இந்த மாளிகை, சில ஆண்டுகளின் பின்னர் கைவிடப்பட்டு வெறுமையாக காணப்பட்டது.

அதன் பின் பிரான்சிய புரட்சியின் பின்னர் இந்த மாளிகை மத்திய கலை அருங்காட்சியம் எனும் பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது.

அதிலிருந்து இன்றுவரை உலகிலேயே மிகப்பெரிய அருங்கட்சியாகமாக லூவர் அருங்கட்சியகம் காணப்படுகிறது.

இதனை ஒரு சிறிய கிராமம் என்றும் சொல்லலாம்.

காரணம், இங்கு காணப்படும் பொருட்களை பார்வையிட நமக்கு 100 நாட்களுக்கும் அதிகமான காலம் தேவைப்படும்.

அந்தளவுக்கு அதிகமான பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்கள் இங்கு காணப்படுகின்றன.

இங்குதான் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் காணப்படுகிறது.

அதுமட்டுமா? 9000 வருடங்கள் பழமையான மனித சிலை, அரசர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள் , உலகிலேயே மிக உயரமான ஒவியம் , வைர வைடூரியங்கள் இவ்வாறு விலைமதிப்பற்ற ஏராளமான பொருட்கள் இங்குதான் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு வளமிக்க அருங்கட்சியகத்தில் ஏற்கனவே மோனலிசா ஓவியம் களவாடப்பட்டு 2 வருடங்களின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு ஒரு பெரிய கொள்ளை சம்பவம் இடம்பெறுள்ளது.

ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பார்வையாளர்களுக்காக லூவர் அருங்காட்சியத்தில் கதவுகள் திறக்கப்படுகின்றன.

பார்வையாளர்கள் மெதுவாக உள்ளே நுழைகின்றனர்.

இதையடுத்து அரை மணிநேரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் அந்த அருங்காட்சியத்தில் டெனோன் பிங் எனும் பகுதியில் அந்த வாகனம் நிறுத்தப்படுகிறது.

அப்பகுதியில் கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்து மெதுவாக ஒரு மின் உயர்த்தி நான்கு நபர்களுடன் மேலே நகர்கிறது.

அந்த நான்கு நபர்களும் கட்டிட வேலை செய்யும் நபர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர்.

இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

அதன்பின்னர் முதலாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கிருந்த கண்ணாடிக்கதவினை வெட்டி மெதுவாக உள்ளே நுழைகின்றனர்.

மெதுமெதுவாக அடுத்தடுத்த கதவுகளை உடைத்து உள் நுழைய அங்கிருந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கிறது.

அங்கிருந்த பாதுகாவலர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

அலாரம் அடித்த அடுத்த நிமிடத்திலேயே அந்த பகுதிக்கு சென்ற பாதுகாவலர்கள் அங்கு கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அங்கு இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனையும் அவதானிக்கின்றனர்.

அதன்பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசரணைகள் நடைபெறும்போது அங்கிருந்த கொள்ளையர்களின் கனரக வாகனம் தீப்பிடித்து எறிகின்றது.

என்னதான் நடந்தது என பார்ப்பதற்கு பொலிஸார் அங்கிருந்த cctv காட்சிகளை அவதானிக்கின்றனர்.

அருங்காட்சியகத்தில் ஏற்கனவே கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெறும் நிலையில் இதனை அறிந்துகொண்டு அவர்களைப்போலவே வந்த கொள்ளையர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அரசர்களின் விலையுயர்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பி செல்கின்றனர்.

அவர்கள் வந்த அந்த வாகனத்தை தீயில் எறிந்துவிட்டது, இவ்வாறிருக்க எவ்வாறு அவர்கள் தப்பி சென்றனர் என்ற கேள்வி எழுகிறது?

ஆம், அவர்கள் வந்த அந்த வாகனத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு தமது ஆடைகளை மாறிவிட்ட அங்கிருந்த வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுள்ளனர்.

அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்த 8 நகைகளை மாத்திரமே கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அதில் மூன்றாம் நெப்போலியன் மனைவியின் முத்து கிரீடம், முதலாம் நெப்போலியனின் மரகத ஆபரங்கள் என சுமார் 100 மில்லையன் அமெரிக்க டொலர் பெறுமதியான நகைகளேயே அவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் 4 முதல் 7 நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வளவு பெரிய அருங்காட்சியகம் , ஆனால் அங்கு எவ்வாறு இப்படி ஒரு கொள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கும்?

அருங்காட்சியத்தில் பார்வையாளர்கள் அதிமாக இருந்ததமையினாலும் பாதுகாவலர்கள் மிக குறைவாக இருந்தமையினாலுமே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த அருங்காட்சியக நிர்வாகம் கூறுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தை பார்க்கும் பொழுது இது மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக கருதப்படுகிறது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்தும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டடுள்ளனர்.

இருப்பினும் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட மோனலிசாவின் ஓவியம் போல கொள்ளையிடப்பட்ட இந்த நகைகளும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.