த.வெ.க. தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு!

02.05.2026 18:29:16

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த அலுவலகமானது (01.05.2026) அதிகாலை சுமார் 02:30 மணியளவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதாவது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

 

இந்தத் தீ விபத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி தவெக வேட்பாளர் எஸ். ரமேஷின் பிரச்சாரப் பொருட்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த தவெக தலைவர் நடிகர் விஜய்யின் விளம்பரப் பதாகைகளும் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த குற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தவெக வேட்பாளர் ரமேஷ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தொகுதி தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற உள்ளதா திருவரங்கம் தொகுதி வாக்கு எண்ணிக்கை?. திருச்சி மாவட்டம், திருவரங்கம் (ஶ்ரீரங்கம்) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த எனது தேர்தல் அலுவலகம் ஒன்றை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள். அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும் தேர்தல் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், கட்சி நிர்வாகிகள், தோழர்களுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது.

இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.