14ஆவது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஆரம்பம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 30வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது. மே மாதம் 2ஆம் திகதி 29 போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை கொவிட்-19 பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு நாளை தொடர் மீள ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள இந்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
எஞ்சிய 27 லீக் போட்டிகள் உட்பட மொத்தமாக 31 போட்டிகள் டுபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. இதுவரை நிறைவடைந்துள்ள 29 போட்டிகளின் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளியுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.