மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும்!
|
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றை பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
|
|
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இன்று கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதாவது இடதுசாரி கொள்கையுடன் போராடிய ஒரு மாவீரர் ரோகண விஜேவீரவின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளிலேயே அவர் இலங்கை அரச படையினால் கொல்லப்பட்டார். அதில் ஜே.வி.பி வீரர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவஞ்சலியில் எமது அஞ்சலியை செலுத்துகின்றோம். இதேவேளை இந்த கார்த்திகை மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர்கள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் 32க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. எமது இனத்திற்காக விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் பொதுமக்கள் இறந்த புனிதமான அந்த இடங்களை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கே வாழும் தமிழ் மக்களிடம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கே நிலைகொண்டுள்ள இராணுவ பிரச்சனத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுயாதீனமாக அங்கே நினைவு கூரலை நடத்துவதற்கு இடத்தை கொடுக்க வேண்டும். அந்த இடத்தை அங்கீகரித்து பொதுமக்களுக்கு அதனை கொடுக்கும் போது நீங்கள் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள். அதற்கான நிதியை ஒதுக்கி அந்த புனிதமான இடத்தை பாதுகாப்போம் என்பதனை தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இந்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். |