
அமெரிக்கா விலகினால் பின்னடைவு ஏற்படும்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில், இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவொன்று ஏற்படக்கூடும் என சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனன், இருப்பினும் இலங்கை விவகாரம் தொடர்பில் கனடா கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். |
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் புதன்கிழமை (22) நாட்டுக்கு வருகைதந்த கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் மேரி-லூயிஸ் ஹனனுக்கும், கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (22) கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்த போதிலும், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என மேரி-லூயிஸ் ஹனனிடம் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இவ்விடயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். அதேபோன்று இலங்கை என்பது பல்லின சமூகங்கள் வாழும் பன்மைத்துவ நாடு எனும் போதிலும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சில தீர்மானங்கள் மற்றும் நியமனங்களின்போது அந்த பன்மைத்துவம் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர்கள் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் எடுத்துரைத்தனர். அத்தோடு கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயன்முறையைப் பொறுத்தமட்டில் இலங்கை அரசினால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்களால் எவ்வித முன்னேற்றங்களும் அடையப்படவில்லை என விசனம் வெளியிட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் செயன்முறையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்தும் விளக்கமளித்தனர். அவற்றை செவிமடுத்த கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் கனடா கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில், பேரவையில் இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவொன்று ஏற்படக் கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் கனடா அதன் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்றார். |