தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியில் சமண மதத்தின் நிலை என்ன?

21.07.2024 09:00:00

சோழ அரசர்கள் சைவ வழிபாட்டை பின்பற்றியவர்களாக இருந்தாலும், சமண வழிபாட்டுத் தலங்களையும் ஆதரித்துள்ளார்கள். சைவ ஆலயங்களைப் போலவே சமணப் பள்ளிகளுக்கும் அவர்கள் தானங்களை வழங்கி இருப்பதை வரலாற்று ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சோழர் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள், அவை தரும் கல்வெட்டு செய்திகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி அருகே மேல் சித்தாமூரில் உள்ள பார்சுவநாதர் சமணப் பள்ளி, சோழர்களுக்கும் சமண மதத்திற்குமான உறவை உறுதிப்படுத்துகிறது. சோழ அரசியான காடவர்கோன்பாவை, இந்தக் கோவிலுக்கு வழங்கிய தானம் குறித்த கல்வெட்டும் இங்கு உள்ளது.

 

 

"ஸ்வஸ்திஸ்ரீ காடவர்கோன்பாவை கனைகழற்காற்

சோழர்க்கு நீடுபுகழ்த்தேவியர் நீணி

லத்துப் பீடு சிறந்தமரும் சிற்றாமூர் செய்திறங்கள்

மீட்ப்பித் தறம் பெரு வாக்குமவள்“ என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

"சோழ மன்னனுடைய புகழ் மிக்க தேவியாகிய காடவர்கோன்பாவை, இந்த நெடிய நிலப்பரப்பில் பெருமை பொருந்தி விளங்கும் சிற்றாமூரில், முன்பு செய்யப்பட்ட அறத்தினை மீண்டும் நிலைப்பெறச் செய்து சமண அறங்கள் பெருக வழிவகை செய்தாள் என்பதையே மேற்காணும் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது" என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

இதில் குறிப்பிடப்படும் காடவர்கோன்பாவை, முதலாம் ஆதித்தச் சோழனின் மனைவி திரிபுவன மாதேவியாக இருக்க வேண்டும் என்பது வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷின் கருத்தாகும்.

 

 

மேல் சித்தாமூரில் உள்ள சமண வழிபாட்டுத்தலத்தின் சிறப்பு பற்றி பிபிசி தமிழிடம் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் விவரித்தார்.

"மேல்சித்தாமூர் பார்சுவநாதர் சமணப்பள்ளி தமிழ்நாட்டில் திகம்பர பிரிவின் புகழ்பெற்ற ஜைன மையங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் திகம்பர பிரிவின் தலைமை மடமாகவும் இது செயல்படுகிறது. ஜின காஞ்சி மடம் என்று அழைக்கப்படுகிறது. மடாதிபதியும் இங்கு இருக்கின்றார்" என்றார் அவர்.

இங்கு இரண்டு சமணப் பள்ளிகள் அருகருகே உள்ளன. ஒன்று பார்சுவநாதர் கோவில், மற்றொன்று மலைநாதர் கோவில் ஆகும். இங்கு சோழர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட மகாவீரர், பாகுபலி, நேமி நாதர், தர்ம தேவதை சிற்பங்களை இன்றும் நாம் காண முடியும். இந்த ஊர் கல்வெட்டில் சிற்றாமூர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

பார்சுவநாதர் சமணப் பள்ளிக்கு கி.பி. 1173ஆம் ஆண்டில் இரண்டாம் ராஜாதிராஜனின் சம்புவராய ஆட்சியாளரான செங்கேணி அம்மையப்பன் காலத்தில் ஆண் தேவரடியாரின் மனைவி தந்த தானம் குறித்த கல்வெட்டும் உள்ளது.

"வரலாற்றில் தேவரடியார்கள் கோவில் சேவை புரிபவர்களாக இருந்துள்ளனர். பெரும்பாலும் பெண்களே அந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்ற போதிலும் ஆண்கள் சிலரும் தேவரடியார்களாக இருந்துள்ளனர் என்பதற்கு சில சான்றுகள் கிடைக்கின்றன" என்று கூறிய அவர், தொடர்ந்து பேசினார்.

"அப்படி ராஜ கம்பீர தேவராயர் என்ற ஆண் தேவரடியார் ஒருவர், இரண்டாம் ராஜாதி ராஜனின் ஆட்சி காலத்தில் இந்த சமண கோவிலில் தேவர் அடியாராக பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். இவரின் மனைவி 'தேவர் மகள்' என்பவர் இந்த கோவிலின் பாரிச தேவருக்கு சித்தாமூர் பகுதி முழுவதையும் தீர்க்க மானியமாக வழங்கி உள்ளதை கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது" என்று கூறினார்.

 

 

கி.பி.1136-இல் விக்ரம சோழன் சுமார் 25 கிராமங்களில் தலா 3 மா நிலத்தை தானமாக வழங்கிய கல்வெட்டும் இங்குள்ளது. அதில் நிலங்கள் எந்தெந்த ஊர்களில் வழங்கப்பட்டன என்பதை தெளிவாக ஊர்களின் பெயர்களுடன் உள்ளதை கல்வெட்டில் காண முடிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1148) வழங்கிய தானம் குறித்த கல்வெட்டும் உள்ளது.

சைவ ஆலயங்களுக்கு மட்டுமல்லாமல் சமணப் பள்ளிகளுக்கும் அரசர்களும் சாமானிய மக்களும் தானங்களை வழங்கியுள்ளார்கள். அதிலும் சோழ அரசர் உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி படைத் தளபதி ஒருவர் நிலதானம் வழங்கியுள்ளார் என்ற பேராசிரியர் ரமேஷ், அது குறித்து விளக்கினார்.

"உளுந்தூர்பேட்டை அருகே திருநறுங்குன்றம் அப்பண்டை நாதர் என அழைக்கப்படும் பார்சுவநாதர் கோவில் உள்ளது. கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில், ஒரு பெரிய பாறையின் மேற்கு முகத்தில் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரரின் உருவத்தை உள்ளடக்கியதாகும்." என்று கூறினார்.

 

படக்குறிப்பு,திருநறுங்குன்றம் அப்பண்டை நாதர் கோவில் (சமண வழிபாட்டுத் தலம்)

முதலாம் ராஜராஜன் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ அவரது படைத் தலைவரான மும்முடிச் சோழன் பிரம்மராயன் என்பவர் இந்த சமணப் பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியதை கல்வெட்டு செய்தி உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் ரமேஷ்.

"மற்றொரு கல்வெட்டில் முதலாம் ராஜராஜனின் ஒரு அதிகாரியின் மனைவி, சில நிலங்களை ஸ்ரீபலி மற்றும் ஆராதனை விழாக்கள் நடத்துவதற்காக கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்ற செய்தியும் உள்ளது. அதேபோல் இரண்டாம் குலோத்துங்க சோழன் தனிப்பட்ட முறையில் இந்தக் கோவிலில் ஆர்வம் காட்டியுள்ளார். சிறுசாத்தநல்லூர் என்ற கிராமம் முழுவதையும் காணிக்கையாகக் தந்துள்ளதை கல்வெட்டு தெரிவிக்கிறது" என்று கூறினார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சமணப் பள்ளிகளுக்குச் பெரும் கொடை வழங்கியவர்களில் பலர் மலையமான், சேதிராயர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும் (சோழர் உட்பிரிவுகள்), சோழர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சோழர்கள் மீது பற்று கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் ரமேஷ் கூறினார்.