சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ - முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்

05.03.2021 07:00:00

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள  நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது.

போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம்.

உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட  நம் இராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள  நம் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில்  எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த  சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும். போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை  நாம் தெளிவாக கற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.