கேரளாவில் நாய்கள் படுகொலை பயமுறுத்துவதாக உள்ளது...!

17.09.2022 10:31:39

கேரளாவில் நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட் செய்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர். கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் பேர் தெருநாய்களால் கடி பட்டுள்ளனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்

கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் கேரளா முழுவதும் நாய்கள் மீது பீதி மட்டுமின்றி வெறுப்புணர்வும் நிலவுகிறது. பல சந்தர்ப்பங்களில், நாய் தாக்குதலின் பயங்கரமான சிசிடிவி காட்சிகளும் வைரலாகிவருகின்றன. கோட்டயம் பகுதியில் மட்டும் இரண்டு மாதங்களில் 40க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதே கோட்டயத்தில் ஒரே ஒரு குடியிருப்பு பகுதியில் மட்டும் 12 நாய்கள் இறந்து கிடந்தன. இந்த நாய்களுக்கு உள்ளூர்வாசிகள் விஷம் கொடுத்து கொன்றதாக தெரிகிறது.

தற்போது கேரள மக்கள் நாய்களை கொலை செய்ய வழிவகைதேடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு எதிராக டுவிட் செய்து உள்ளார். இது குறித்து தவான் வெள்ளிக்கிழமை செய்துள்ள டுவிட்டில். கேரளாவில் நாய்கள் படுகொலை செய்யப்பட்ட படங்கள் மிகவும் பயமுறுத்துவதாக உள்ளது. இவ்வாறான கொலைகள் தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என கூறி உள்ளார்.

கோழிக்கோடு மேயர் பீனா பிலிப் தற்போது நாய்கள் தொடர்பாக தனது அறிக்கை ஒன்றில் சிக்கியுள்ளார். பினா முன்பு நாய்களைக் கொல்வதை எதிர்த்தார். ஆனால், மேயரின் இந்த அறிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்ததும், அவர் உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பீனா, "நாய்களைக் கொல்வதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நாய்கள் மக்களைத் தாக்கினால், குழந்தைகளைக் கொன்றால், மக்களின் எதிர்வினையை நியாயப்படுத்த முடியாது. மக்களை குறை சொல்ல முடியாது" என கூறி உள்ளார்.