அமைதிப் பேச்சுவார்த்தை.
|
ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை என்பது மோசமான மத்தியஸ்தத்தினால் மாத்திரம் தோல்வியடைவதில்லை. மாறாக சமாதானத்தை விட போரில் ஈடுபடுவதே தமக்குச் சாதகமாக அமையும் என ஒரு தரப்பு இராஜதந்திர ரீதியாக சிந்திக்கும்போது தான் அது தோல்வியடைகிறது என இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார். |
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்கத்தை முன்னிட்டு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: முடிவில்லாத போரை விட, குழப்பமில்லாத சமரசம் மேலானதாகும். போர்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகமுக்கியமான பாடம் இதுவாகத்தான் இருக்கும். இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் ஏன் இவ்வளவு மோசமான இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது? நீண்டகாலம் வெற்றிகரமாக நடைபெற்ற சமாதான முயற்சிகள் இறுதியில் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து துடிப்பான இளம் இலங்கையர்களுடன் கலந்துரையாடினேன். இலங்கையின் உள்நாட்டுப்போரில் தலையீடு செய்வதற்கு நோர்வேக்கு எந்தவொரு வெளிப்படையான காரணமும் இருக்கவில்லை. காலனித்துவ வரலாறு இல்லை. மூலோபாய நலன்கள் இல்லை. செல்வாக்குச் செலுத்துவதற்கான அதிகாரமும் இல்லை. ஆனால் இவ்விவகாரத்தில் ஒரு அமைதியான முடிவை எட்டுவதற்காக நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எமது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டோம். ஒரு அமைதிப்பேச்சுவார்த்தை என்பது மோசமான மத்தியஸ்தத்தினால் மாத்திரம் தோல்வியடைவதில்லை. மாறாக சமாதானத்தை விட போரில் ஈடுபடுவதே தமக்குச் சாதகமாக அமையும் என ஒரு தரப்பு இராஜதந்திர ரீதியாக சிந்திக்கும்போது தான் அது தோல்வியடைகிறது. மத்தியஸ்தம் வகிப்பவரால் அதனை மீறிச் செயற்படமுடியாது. மாறாக ஒரு தரப்பின் எண்ணம் மாறும்போது, அதனை ஏற்று வழிநடத்துவதற்குரிய செயன்முறையொன்று தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அப்பேச்சுவார்த்தைக் களத்தில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை மாத்திரமே எம்மால் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். |