யாழ் குடாநாட்டை மையப்படுத்தி சீனா நகர்வு
யாழ் குடாட்டை மையப்படுத்தி மீண்டும் இந்தோ - சீன புவிசார் அரசியல் களம் தீவிரமடைந்ததன் அறிகுறியாக சீனாவின் பிரதித்தூதர் உட்பட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் தமது பயண நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த குழுவில் பங்கெடுத்த அதிகாரி ஒருவர் பட்டு வேட்டியுடன் காட்சியளித்திருந்தமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு போட்டியாக சீனா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தை கையாளவது உட்பட வடக்கை மையப்படுத்தி இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் தனது திட்டங்களை முன்னெடுக்கத் தலைப்படுவதற்கு ஆதாரமாக சீன தூதரகத்தின் முக்கிய இராஜதந்திரியும் பிரதித் தூதர் ஹூ வெய் தலைமையிலான குழு இன்று யாழ்பாணத்தில் சந்திப்புகள் மற்றும் பார்வையிடல்களை செய்துள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்தூதரகம் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் உட்பட்ட பல நிகழ்வுகளின் பங்கெடுத்த நிலையில் இன்று சீனத்தூதரகத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்தில் பிரசன்னப்பட்டிருந்தது.
அந்தக்குழுவில் இருந்த அதிகாரி ஒருவர் பட்டு வேட்டியுடன் காட்சியளித்திருந்தார்.
சீனத் தூதரகத்தின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழு யாழ்ப்பாணக்கோட்டை உட்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளது.
இந்தோ - சீன புவிசார் அரசியல்களம்
சீனக்குழுவின் பயணம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணக் கோட்டைக்கு பொறுப்பான அதிகாரிகளோ அல்லது பணியாளர்களோ இந்தக்குழுவுடன் தென்பட்டிருக்கவில்லை.
இலங்கையை மையப்படுத்திய இந்தோ - சீன புவிசார் அரசியல்களம் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்துக்குள்ளும் நுழைவதான விமர்சனங்கள் வெளியான நிலையில் சீனக்குழுவின் இன்றைய வடக்குப்பயணம் அமைந்துள்ளது.