உலக பொருளாதாரப் பேரவையின் விசேட கூட்டம்!
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.
உலக பொருளாதாரப் பேரவையின் ஏற்பாட்டில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு நடைபெறவுள்ள இவ்விசேட கூட்டமானது உலகளாவிய ரீதியில் பல்துறைசார் பிரதிநிதிகளையும், தொழிற்துறைத் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய சிக்கலான பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்விசேட கூட்டத்தில் நகர்ப்புற எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் வடக்கிலிருந்து தெற்கு – கிழக்கிலிருந்து மேற்கு – நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல் ஆகிய தலைப்புக்களில் நடைபெறவிருக்கும் இரு அமர்வுகளிலும் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, இவ்விஜயத்தின் போது சவூதி அரேபியா மற்றும் ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அலி சப்ரி இருதரப்பு சந்திப்புக்களையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், ரியாத்தில் வாழும் இலங்கையர்களையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.