பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு முதலீடு தொடர்பில் கவனம்

25.02.2024 09:03:15

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்திப் பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.

மேற்கு, கிழக்கு மற்றும் அம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் சுற்றுலா வலயங்கள் தொடர்பான மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகளும் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மொனராகலை பிரதேசத்தில் மேலதிகமாகக் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பயன்படுத்தி புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், நகர நெரிசலைக் குறைப்பதற்காக அவிசாவளை மற்றும் எஹெலியகொட உட்பட பிரதேசங்களின் மூலோபாய திறன்களைப் பயன்படுத்தி புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் வட கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை நிர்மாணித்தல் தொடர்பான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை முக்கிய முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலை நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு இந்திய-இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் குறித்த மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.