புதிய பிரேரணை வரைவில் முக்கிய விடயங்கள் நீக்கம்!

25.09.2025 08:34:28

பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் அண்மையில் முன்மொழியப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களின் பிரகாரம், மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருப்பதுடன், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான 60/L.1 புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் நடைபெற்றதுடன், அதில் பங்கேற்றிருந்த இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக வெளியிடப்பட்ட பிரேரணையுடன் ஒப்பிடுகையில், இதில் கணிசமானளவு திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அதன்படி தீவிர பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கங்களை சீரமைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுவதுடன் இராணுவமயமாக்கம், ஊழல் மோசடிகள், ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலின்மை மற்றும் கடந்தகால மீறல்கள் விடயத்தில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பன உள்ளடங்கலாக இந்நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு வழிகோலிய காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தித் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம் என முன்னைய பிரேரணையில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய திருத்தத்தின் ஊடாக இராணுவமயமாக்கம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறுதிப்படுத்தப்படவேண்டும் என முன்னைய பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது வெறுமனே பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனத் திருத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயம், தற்போது உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பல தசாப்தகாலமாகத் தொடர்ந்த இனவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளினாலும், இனப்பிரச்சினையினாலும் மிகையான பாதிப்புக்களும், துன்பங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக முதலாவது வரைவில் கூறப்பட்டுள்ள விடயத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய இனப்பிரச்சினை என்ற சொல் நீக்கப்பட்டு, மோதல் மற்றும் பிரிவினைவாத அரசியல் எனும் பதங்கள் மாத்திரம் உட்சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரானதாக இருக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்த விடயம், 'பயங்கரவாதத்தடைச்சட்டம் விகிதாசார அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அதிகமாகப் பாதிக்கிறது' எனத் திருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 'கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம்' என முன்னைய பிரேரணையில் வலியுறுத்தப்பட்டிருந்த விடயம், திருத்தங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டிருக்கும் தற்போதைய பிரேரணையில் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணை மற்றும் அத்தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட சகல விடயங்களையும் தொடர்ந்து காலநீடிப்பு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முன்னைய தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ள விடயம், திருத்தப்படவில்லை.

இருப்பினும் அத்தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் பேரவையின் 61 ஆவது மற்றும் 64 ஆவது கூட்டங்களில் வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்குமாறும், 63 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோருவதாகக் கூறப்பட்டிருந்த விடயத்தில் 61 மற்றும் 64 ஆவது கூட்டங்களில் வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற கூற்று நீக்கப்பட்டுள்ளது.