ஏன் கர்நாடகா போறீங்க? - கொந்தளித்த பெ.சண்முகம்!

31.07.2026 08:07:14

முதல்வர் விஜய் கர்நாடகா பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கர்நாடகா சென்று தண்ணீரை கொண்டு வரப் போறீங்களா என்று விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள பெ.சண்முகம், கர்நாடகா செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் சாடியுள்ளார். முதல்வர் விஜய் காவிரி நதி நீர் மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்ல இருக்கிறார். இதனை கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் உறுதி செய்திருக்கிறார். வழக்கமாக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதியே திறக்கப்படும்.

 

ஆனால் இம்முறை ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட வந்துவிட்ட போதும், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் கர்நாடகா முதல்வரை சந்திக்க விஜய் பெங்களூர் செல்வது தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் செல்லக் கூடாது என்று ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால் விஜய்யின் திட்டத்தில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.

ஆகஸ்ட் 3ஆம் தேதி விஜய் பெங்களூர் வருவது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது. விஜய்யின் வருகைக்காக பெங்களூரிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் கர்நாடகா பயணம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை சந்திக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளி வந்துள்ளது.

இப்போ நான் என்ன கேட்க வருகிறேன் என்றால்.. அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள்.. தண்ணீரை தூக்கிட்டு வரப் போறீங்களா.. தண்ணீர் தர முடியாது என்று மேலாண்மை ஆணையத்தில் கூறிவிட்டார்கள்.. உங்களால் தண்ணீரை வாங்கிவிட்டு வர முடியாது.. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று சட்டசபையில் நாம் தீர்மானம் போட்டுள்ளோம்.

மத்திய அரசுக்கும் அனுப்பிவிட்டோம்.. அணை கட்டவிட மாட்டோம் என்று சொல்வதற்கு தேவை கிடையாது.. தண்ணீரை கேட்டு வாங்கும் பிரச்சனையும் இல்லை.. இத்தகைய சூழலில் விஜய் எதற்காக கர்நாடகாவுக்கு செல்ல வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அந்த பயணத்தை விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் சார்பாக கேட்டு கொள்கிறேன். அங்கு சென்று எதையும் செய்ய முடியாது என்றால், அது என்ன மாதிரியான உணர்வுகளை தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை விஜய் யோசிக்க வேண்டும். இதுவொரு தேவையற்ற பயணம்.. தமிழ்நாடு அனுமதி கொடுக்க வேண்டிய பிரச்சனையே இல்லை.. அணை கட்டினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். ஏற்கனவே அவர்கள் தண்ணீர் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.