வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது

07.05.2024 08:04:57

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கட்டணம் அதிகரிப்புக்கும்,வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்துக்கும் பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. தமக்கு ஏதும் தெரியாது என்று அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பிட முடியாது. அனைத்தையும் அரசியல் கோணத்தில் பார்த்தால் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகித்தல் விவகாரம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. விசாவுக்காக அறவிடும் கட்டணம்  அதிகரிப்பு மற்றும் விசா சேவையை சர்வதேச நிறுவனத்துக்கு வழங்கியுள்ளமை பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது. 30 நாளுக்காக வழங்கப்படும் விசா காலத்தை நீடித்து தருமாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினார்கள்.இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதுவரை காலமும் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட விசாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 பகுதிகளாக வேறுப்படுத்தினோம்.இதற்கமைய 30 நாட்களுக்காக வழங்கப்படும் விசா இரண்டு முறைக்கு வருகை தரும் வகையில் ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது.அதேபோல் ஒரு வருடம்,ஐந்து வருடம் என பல்வேறு பகுதிகளாக விசா வழங்கல் அறிமுகப்பட்டது.

இந்த புதிய யோசனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.75 டொலர் ( இரு முறை வருகைக்காக 06 மாத காலத்துக்கு வழங்கப்படும் விசா) பற்றி தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் உள்ளது.அதேபோல் 30 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் விசாவுக்கு 50 டொலர் மாத்திரம் வழங்கப்படும்.இதற்கான திருத்தம் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட புதிய செயற்திட்டத்தை அமுல்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை திட்டத்தை செயற்படுத்தவில்லை.இவ்வாறான நிலையில் வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனம் புதிய யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.

வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்தின் ஊடாக 151 நாடுகள் சேவை பெறுகின்றன.இந்த நிறுவனம் விசா வழங்கல் சேவையில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமானதல்ல,உலகளாவிய ரீதியில் பங்குடைமையை கொண்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பு வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது பொய்யானதாகும்.வலையமைப்பு மற்றும் முகவர் சேவை மற்றும் பதிப்பு பணிகள் மாத்திரமே இந்த நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

புதிய தொழினுட்பத்தை பயன்படுத்தி விசா விநியோகிப்பதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் தான் இந்த நிறுவனம் தமது யோசனையை முன்வைத்திருந்தது.2023.09.08 ஆம் திகதி அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தேன்.இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் 2023.09.11 ஆம் திகதி குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழு 2023 செம்டெம்பர் முதல் டிசெம்பர் மாதம் வரை வி.எப்.எஸ்.நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து டிசெம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது.இதன் பின்னர் இந்த அறிக்கையுடன் இரண்டாவது பத்திரத்தை 2023.12.04 அமைச்சரவைக்கு சமர்ப்பித்தேன்.இந்த பத்திரத்துக்கு 2023.12.1 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் 2023.12.21 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.ஆகவே அமைச்சரவையினதும்,பாராளுமன்றத்தினதும் அனுமதி இல்லாமல் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டது,வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டதையும்,வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதையும் தாம் அறியவில்லை என்று அமைச்சரவை அமைச்சர்கள் குறிப்பிட முடியாது.

வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையை தேசிய நிறுவனத்துக்கு வழங்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மாதாந்தம் சுமார் 20 இலட்சம் ரூபாவை செலுத்துகிறது.வி.எப்.எஸ்.நிறுவனத்தின் ஊடாக இந்த சேவையை முன்னெடுக்கும் போது ஒரு சதம் கூட செலுத்த வேண்டியதில்லை.வெளிநாடுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் புதிய நிறுவனத்தின் ஊடாக சேவை பெற்றுக் கொள்ளும் போது 18.50 டொலர் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும்.பிற நாடுகளுக்கு இலங்கையர்கள் செல்லும் போது விசாவுக்கு சேவை கட்டணம் அறவிடப்படுகிறது.

வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனம் கடந்த முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது சேவைகளை முன்னெடுத்தது.இதன்போது வழமைக்கு மாறாக வரிசை நீண்டுள்ளது.இந்த நிறுவனம் சேவையை முன்னெடுக்கும் போது இணையத்தள வசதிகளை விமான நிலைய தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.அத்துடன் அதுவரை செயற்படுத்தப்பட்ட வழிமுறையையும் இடைநிறுத்தியுள்ளார்கள்.அதுவரை காலமும் அமுல்படுத்தப்பட்ட செயன்முறை,புதிய செயன்முறை இரண்டையும் கட்டம் கட்டமாக செயற்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியும் விமான நிலைய தரப்பினர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.ஆகவே இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துடன் 12 வருடகால சேவைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் முழுமையான பொறுப்பு இந்த நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.விசா விநியோகத்துக்கான தொழில்நுட்ப வசதிகள் மாத்திரமே இந்நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.இந்தியா,இந்தியா என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை.இவர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை மாலையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மறந்து விடுகிறார்கள்.அத்துடன் இந்திய முட்டைகளை வாங்குவதையும் புறக்கணிப்பதில்லை.அனைத்தையும் அரசியல் கோணத்தில் பார்த்தால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது.