ஐ.எம்.எவ் கடனுதவி இழுத்தடிப்பு

21.12.2022 15:55:38

இலங்கைக்கு கடன் உதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள மேலும் ஒரு மாத காலம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நிதி உதவியை வழங்க நிதியம் எதிர்பார்க்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்த பின்னணியில், ஷெஹான் சேமசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

ஊழியர் மட்ட உடன்படிக்கை

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் டொலர் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியிருந்தது.

இதையடுத்து, இலங்கைக்கான கடனை வழங்க தேவையான அங்கீகாரத்தை இந்த மாதம் நிதியம் வழங்குமென அரசாங்கமும் அரசியல் வட்டாரங்களும் தகவல் தெரிவித்திருந்தன.

கடன் வசதிக்கான அங்கீகாரம்

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் ஜனவரி மாதத்திலும் கிடைக்காமல் போகலாம்.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.