படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ. 250 கோடி பிசினஸ்.

20.09.2026 13:50:03

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து பிரம்மாண்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது  தாய் கிழவி பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் சேயோன்  படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் அடுத்த மெகா ப்ராஜெக்ட் வியாபார நிலவரங்கள் கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற  டான்  படத்திற்குப் பிறகு, இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் மீண்டும் கைக்கோர்க்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, இத்திரைப்படம் வியாபார ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்து வருகிறது.

இப்படத்திற்கான டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகளுக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அவை கணிசமான தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஓடிடி உரிமை சுமார் ரூ. 52 கோடிக்கும், தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை சுமார் ரூ. 22 கோடிக்கும் விற்ற்பனை ஆகியுள்ளது. ஆடியோ உரிமை  சுமார் ரூ. 14 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.  தியேட்டர் அல்லாத உரிமைகள் மூலமாக மட்டுமே தொடக்கத்திலேயே ரூ. 88 கோடி வருவாய் உறுதியாகியுள்ளது

 

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலுங்கானா மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட உள்நாட்டு திரையரங்க விநியோக உரிமைகளுடன், வெளிநாட்டு உரிமைகளும் சேர்ந்து பார்த்தால், ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் மொத்த வணிக மதிப்பு ரூ. 250 கோடியை எட்டியுள்ளது . தற்போது தயாராகி வரும்  சேயோன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் பட்சத்தில், சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் புதிய படத்தின் வியாபாரம் இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என திரையுலக  பார்வையாளர்கள் கூறுகின்றனர்.