நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு?

20.04.2024 00:51:26

புதுடெல்லி: குழந்தைகளுக்கான உணவு பொருட்களை பன்நாட்டு நிறுவனமான நெஸ்லே விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் உள்பட குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் நெஸ்லேயின் குழந்தைகள் உணவு பொருட்களில் தான் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது என்று ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த புலனாய்வு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் செரிலேக் குழந்தைகள் உணவில் 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவே தாய்லாந்தில் 6 கிராம், எத்தியோப்பியாவில் 5.2 கிராம், தென்னாப்பிரிக்காவில் 4 கிராம் ஆக உள்ளது. ஆனால்,இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் சர்க்கரை அளவு பூஜ்ஜியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் நெஸ்லே இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே தெரிவித்தார்.