சர்வதேச கிரிக்கெட் சபையின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக டேவோன் கொன்வே தேர்வு !

13.07.2021 11:05:21

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் டேவோன் கொன்வே தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இதேபோல சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஐ.சி.சி.யால் பரிந்துரை செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இருந்து தலா ஒருவர் இரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வாக்கு நிலையத்தின் வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையே, கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் டேவோன் கொன்வே மற்றும் கெய்ல் ஜேமீசன், தென்னாபிரிக்காவின் குயிண்டன் டி கொக் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் மற்றும் அதனை அடுத்து நடந்த 2 டெஸ்டுகளில் இரண்டு அரைசதம் அடித்ததன் மூலம் டேவோன் கொன்வே சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேபோல கடந்த மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் 8 விக்கெட்டுகள் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, சினே ராணா ஆகியோரை பின்தள்ளி, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் இந்த விருதை வென்றார்.