நிலைமாறுகால நீதிப்பொறிமுறை.

05.03.2025 08:09:38

இலங்கையில் புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய எந்தவொரு செயற்திறன்மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்ட தரப்பினரது ஆதரவைப் பெற்றதாகவும், கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைவாகக் கட்டியெழுப்பப்பட்டதாகவும், சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாகவும் அமையவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் திங்கட்கிழமை (3) இலங்கை நேரப்படி பி.ப 2.00 மணிக்கு நடைபெற்ற அமர்வில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை பேரவைத்தலைவரால் வாசிக்கப்பட்டது.

அதன்படி இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து வரவேற்பு வெளியிடப்பட்டது.

அதனையடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த இணையனுசரணை நாடுகளான பிரிட்டன், கனடா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் வட மெசிடோனியா என்பன சார்பில் உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி மேலும் கூறியதாவது:

இலங்கையில் கடந்த ஆண்டு அமைதியான முறையில் தேர்தல்கள் நடாத்தப்பட்டமையையும், சுமுகமான முறையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றமையையும் வரவேற்கின்றோம். அதன்படி புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி வெறுமனே 4 மாதங்களே கடந்திருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, நாடு முகங்கொடுத்திருக்கும் சவால்களை உரியவாறு கையாள்வதற்கு இந்த மாற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று நல்லிணக்க செயன்முறையில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டையும், அதனை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், வீதி மறியல்களை நீக்குதல், வட, கிழக்கு வாழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு இடமளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

அதேவேளை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு எதிரான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

அரசியலமைப்புக்கு அமைவாக அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கும், ஆட்சியியல் மறுசீரமைப்புக்களில் முன்னேற்றத்தை எட்டுவதற்கும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வரவேற்கின்றோம். அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு உத்தேசித்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையில், அப்புதிய சட்டமானது இலங்கை கொண்டிருக்கும் சர்வதேசக்கடப்பாடுகளுக்கு ஏற்றவாறு அமையவேண்டியது இன்றியமையாததாகும். அதுமாத்திரமன்றி தற்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவிக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஊழல் மோசடி வழக்குகள் தொடர்பில் முன்னேற்றத்தை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி எந்தவொரு வினைத்திறன்மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையும் பாதிக்கப்பட்ட தரப்பினரது ஆதரவைப் பெற்றதாகவும், கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைவாகக் கட்டியெழுப்பப்பட்டதாகவும், சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாகவும் அமையவேண்டும். அத்தோடு குறிப்பாக காணாமல்போனோர் விவகாரம் மற்றும் இழப்பீடு வழங்கல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்ளகக்கட்டமைப்புக்களின் பணிகள் செயற்திறன்மிக்கவகையில் முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

எதிர்வருங்காலத்தில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையும் சுயாதீனமானதாகவும், சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதனை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.