முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!

23.06.2026 15:05:09

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) அவரது நீண்ட கால நம்பிக்கைக்குரியவரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே 12 ஆம் தேதியே இந்த நியமனம் செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 22) தமிழக அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தவெக தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை மேற்கொண்ட ரூட் அமைப்பின் நிறுவனரும், விஜய்க்கு நெருங்கிய ஆலோசகருமான ஜெகதீஷ் பழனிசாமி, முதல்வரின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    

 

ஜெகதீஷ் பழனிசாமி இன்று தமது சமூக வலைதளப் பக்கத்தில், ரசிகனாக உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நான், இப்போது தனிச் செயலாளராக புகைப்படம் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சினிமா முதல் அரசியல் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்யின் நிழலாகவும், அவரது மிக நெருங்கிய மேலாளராகவும் பயணித்து வருபவர் ஜெகதீஷ் பழனிசாமி. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகங்கள், சமூக வலைதளப் பக்கங்களைக் கையாளுதல் மற்றும் கட்சியின் 'வார் ரூம்' (War Room) பணிகளைத் துல்லியமாகத் திட்டமிட்டு வழிநடத்திய 'தி ரூட்' (The Route) நிறுவனத்தின் பின்னணியில் இருந்தவர் இவர்தான்.

கட்சியின் தேர்தல் வெற்றிக்காகத் திரைமறைவில் உழைத்த ஜெகதீஷுக்கு தற்போது கோட்டையிலும் மிக முக்கிய பொறுப்பு வழங்கி அழகு பார்த்துள்ளார் முதல்வர் விஜய்.

இன்று முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெகதீஷ் பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

"18 ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஒரு சாதாரண ரசிகனாக உங்களுடன் நெகிழ்ந்து போய் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்... இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு தனிச் செயலாளராக உங்களுடன் நிற்கிறேன்" என்று நெகிழ்ச்சியோடு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அரசியல் ரீதியான நகர்வுகள், முக்கியச் சந்திப்புகள் மற்றும் கட்சியின் நிர்வாக முடிவுகளை ஒருங்கிணைப்பதில் ஜெகதீஷ் பழனிசாமி இனி மிக முக்கியப் பங்கு வகிப்பார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரைத்துறையைப் போலவே, அரசியல் நிர்வாகத்திலும் இந்த காம்போ மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.