
ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஈரானில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி கும்பல்கள் பல இந்தியர்களை ஏமாற்றி வருகின்றன. அங்கு சென்றவுடன், குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் பணம் பறிக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் அரசு இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிப்பதாகவும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக விசா இல்லாமல் செல்ல அனுமதியில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
“வேலைவாய்ப்பு அல்லது பிற நோக்கங்களுக்காக விசா இல்லாத நுழைவுக்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறும் எந்த முகவரும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம். எனவே இந்தியர்கள் இத்தகைய பொய்யான சலுகைகளுக்கு இரையாகக் கூடாது” எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.