பூட்டான் உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை!

02.09.2026 08:50:44

பூட்டானில் நடைபெற்ற உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் தொடர்பான இலங்கையின் பாரம்பரிய அறிவை பிரதமர் உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

 

நேற்று(01) முதல் பூட்டானின் டுங்கார் ட்சோங்கில் (Dungkar Dzong) நடைபெற்ற, "நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக விழிப்புணர்வுடன் எழுச்சி பெறுதல்" எனும் தலைப்பின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முதன்மை உரையாற்றினார்.

 

2026ஆம் ஆண்டு விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாடானது, நிலையான, நியாயமான மற்றும் மீளுற்பத்தி உணவு முறைமைகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான விழிப்புணர்வு, சமூக விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மாற்றத்தின் பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தி நடத்தப்படுகின்றது. 

 

பூட்டான் அரசாங்கம், விழிப்புணர்வு உணவு முறைமைகள் கூட்டணி (Conscious Food Systems Alliance - CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன இணைந்து, "உணவு முறைமைகளின் மாற்றத்தின் இதயத்தை இயங்கச் செய்தல்" (Activating the Heart of Food Systems Transformation) எனும் பரந்த தலைப்பில் இதனை ஏற்பாடு செய்திருக்கின்றன.

 

இந்த உலக உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இலங்கையர்களாகிய தாம் உணவு உற்பத்தியிலிருந்து சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் நுகர்வு வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை பரம்பரை பரம்பரையாகப் புரிந்துகொண்டு, அந்த மரபை முன்னெடுத்துச் செல்வதில் ஓர் இலங்கையராகப் பெருமிதமடைவதாகத் தெரிவித்தார்.

 

முதன்மை உரையைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டானின் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவுடன் "விழிப்புணர்வுத் தலைமை – மேலும் நீதியான மற்றும் புத்துயிர் பெறும் உலகத்திற்கான மாற்றத்தை எளிதாக்கும் கலை" எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

இலங்கையின் பாரம்பரிய உணவு முறைமைகள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்தன என்றும், பாரம்பரிய விவசாய முறைமைகள் இயற்கைக்கு எதிராக அமையாது, இயற்கையோடு இயைந்து செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

குழு விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உணவுப் பாதுகாப்பு, சிறந்த விவசாய நடைமுறைகள், பெண்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் நிலையான சமூக, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

 

இந்த உலக உச்சிமாநாடானது, நிலையான உணவு முறைமைகள், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் விழிப்புணர்வுமிக்க தலைமைத்துவத்தின் பங்களிப்பு குறித்து, இலங்கையின் கருத்துகளையும் அனுபவங்களையும் உலகம் அறியச் செய்வதற்கான முக்கிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கின்றது