யாழ்ப்பாணத்தில் 13 நாட்களில் 700 மி.மீ மழை!
யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், அதனால் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். |
யாழ். மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். கடந்த 29ஆம் திகதி 82 பாதுகாப்பு நிலையங்களில் 2ஆயிரத்து 163 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 417 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பலர் தற்போது தமது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் சில இடங்களில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதனால், இன்றைய தினம் 01ஆம் திகதி வரையில், 26 பாதுகாப்பு நிலையங்களில் 695 குடும்பங்களை சேர்ந்த 2ஆயிரத்து 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் கால பகுதி வரையில் அவர்களுக்கான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உப்புக்கேணி எனும் பிரதேசத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை காணப்படுவதால், 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரதேசத்தில் இருந்து வெள்ள நீர் வடிந்தோட வழியில்லாததால் , நீர் இறைக்கும் இயந்திரம் ஊடாக வெள்ள நீரினை இறைத்து வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தம் ஏற்படாதவாறு , வடிகால் அமைப்புக்களை சீர் செய்யவும், பொறிமுறைகளை உருவாக்கவும் அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம். எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலக ரீதியாக , எப்பகுதிகளில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது என்பதனை கண்டறிந்து அது தொடர்பிலான திணைக்களத்தினருடன் நேரடியாக அந்த இடங்களுக்கு விஜயம் செய்து ஆராய்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார். |