கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு

02.06.2024 09:36:49

இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள்.

ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பாட்டை,சிற்றுண்டிகளை, குடிபானங்களை ,ஐஸ்கிரீமை தமிழ் இளையோர் விரும்பி வாங்கினார்கள்.

அவ்வாறு குடிபானங்களை வாங்கிய ஒரு இளைஞரிடம் ஒரு ஊடகவியலாளர் பின்வருமாறு கேட்டிருக்கிறார்…..”தமிழ் மக்கள் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்த பொழுது அதை ஒரு குற்றமாகக் கருதி, போலீசார் நான்கு பேர்களை கைது செய்து பின் விடுதலை செய்தார்கள். அதுபோலவே கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்துக் கொண்டிருந்தபொழுது போலீசார் அதைத் தடுத்து கஞ்சிப் பானையைத் தூக்கி கொண்டு போனார்கள். மேலும் அடுப்பை சப்பாத்து கால்களால் தள்ளி நகர்த்தினார்கள். கிழக்கில் கஞ்சி காய்ச்சியதை ஒரு குற்றமாகக் கூறிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகிய படையினர் வெசாக் பந்தல்களில் வைத்து வழங்கிய குடிபானங்களை நீங்கள் ஏன் வாங்கிக் குடிக்கிறீர்கள்?” என்று. ஆனால் அதை வாங்கி குடிக்கும் இளையோருக்கு அந்த உணவில் இருக்கும் அரசியல் விளங்குவதாக தெரியவில்லை.