நெதர்லாந்தின் பற்றி எரிந்த வரலாற்று புகழ்பெற்ற தேவாலயம்!

01.01.2026 13:44:13

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் இன்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான இன்று எதிர்பாராத விதமாக தேவாலயத்தின் மேல் பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

சிறிது நேரத்திலேயே தீ மளமளவெனக் கோபுரத்தின் உச்சி வரை பரவியது. தேவாலயத்தின் மேலிருந்து கரும்புகை வெளியேறுவதையும், தீப்பிழம்புகள் கோபுரத்தைச் சூழ்ந்திருப்பதையும் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்தவுடன் ஆம்ஸ்டர்டாம் தீயணைப்புப் படையினர் ஏராளமான வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேவாலயத்தின் கோபுரம் உயரமாக இருப்பதாலும், அப்பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் என்பதாலும் தீயை அணைப்பதில் கடும் சவால்களை எதிர்கொண்டனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தினால் தேவாலயத்தின் பழமையான கோபுரப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தீ விபத்து ஏற்பட்ட போது தேவாலயத்தினுள் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் ஏதேனும் கோபுரத்தின் மீது விழுந்ததா அல்லது மின் கசிவு காரணமா என்பது குறித்து பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.