விடைபெற்றார் ஈரான் ஜனாதிபதி!

23.05.2024 15:00:45

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று ஈரானின் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் நடைபெற்றது.

 

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் இன்று நடைபெற்றது.

மறைந்த ஜனாதிபதியின் புகைப்படங்களை ஏந்தியவாறு நீண்ட வரிசையில் மக்கள் அணிவகுத்து அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேரணியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறத்திலான உடையணிந்து துக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோதும் ஈரானில் இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்கள் எண்ணிக்கையை விட குறைவாக மக்களே இதில் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாக்கி தலைமையிலான ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களின் தூதுக்குழு உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

எனினும் மேற்கத்திய தலைவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வில் பிராத்தனைகள் இடம்பெற்றிருந்ததுடன் இறந்தவர்களுக்காக ஈரானில் 5 நாட்கள் துக்க தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த அறிவித்தலை ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அறிவித்தார்.

 

ஈரானிய ஜனாதிபதி பிறந்த மஷாத் நகரில் அமைந்துள்ள கல்லறையான இமாம் ரேசாவின் புனித ஆலயத்தில், இப்ராஹிம் ரைசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஈரானின் மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களுக்குப் பின்னர் இன்று புனித நகரமான மஷாத் நகரில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.