முறையாக புனர்வாழ்வளிக்காவிடின் எதிர்காலத்திலும் குண்டு வெடிக்கும்!

04.04.2026 20:58:23

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக, பிரதான சூத்திரதாரியை மாத்திரமே தேடித் திரிகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்காவிடின் எதிர்காலத்திலும் நாட்டில் குண்டு வெடிக்கும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

    

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பெருமளவிலானோர் வந்திருந்தார்கள். நான் அழைப்பு விடுக்காமலும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வந்திருந்தார்கள். பேசப்பட்ட விடயங்களை பதிவு செய்தார்கள்.குறிப்பு எடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது தற்போது வெளிப்பட்டு விட்டது. ஆகவே இனி யார் சூத்திரதாரி என்று ஆராய்வது பயனற்றது. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதும் செயற்படவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து, கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதினேன்.

யுத்தம் முடிவடைந்தவுடன் விடுதலை புலிகள் அமைப்பின் 12 ஆயிரம் போராளிகளுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டது. அவர்கள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். முறையாக புனர்வாழ்வளித்ததால் தான் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் புலிகள் அமைப்பை குறிப்பிட்டுக் கொண்டு எவ்வித தாக்குதல்களும் இடம்பெறவில்லை.

பயங்கரவாதி சஹ்ரான் ஒரு மௌலவி அதேபோல் இந்த குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தரப்பினர் இன்றும் சிறையில் உள்ளார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் மௌலவிகள்.பயங்கரவாதி சஹ்ரான் உட்பட ஏனையவர்களிடம் பயிற்சிப்பெற்ற 300 இற்கும் மேற்பட்டவர்கள் இன்றும் சுதந்திமாக உள்ளார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாறாக பிரதான சூத்திரதாரியை மாத்திரமே தேடித் திரிகிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்காவிடின் எதிர்காலத்திலும் நாட்டில் குண்டு வெடிக்கும் என்றார்.