விஜயை மறைமுகமாக தக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

08.12.2024 14:17:36

சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறி இருந்தார். இந்நிலையில், தஞ்சையில் நடந்த சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை மண்டல கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் விஜய் குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.

   

அவர் கூறியதாவது..,

"அறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என சொல்லி கொடுத்தது தி.மு.க. தான். படையை திரட்டி கொண்டு கொள்கை எதிரியை நோக்கி வாருங்கள் போவோம் என கூறியபோது நமக்கு பின்னால் இருந்து கொண்டு நம் மீது அம்பை விடுகிறான்.

கொள்கை எதிரி இதை பார்த்து சிரிப்பான் என்று குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் போட்டு உலர்கிறான்.

கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கும் சேர்த்து தான் தி.மு.க. உழைக்கிறது.

திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைத்தது, பெண்ணடிமைத்தனத்தை கிழித்து எறிந்தது, மூடநம்பிக்கையை கிழித்து எறிந்தது.

இதையும் மீறி எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள்.

சிலர் சங்கீகளா அல்லது சங்கீகள் போர்வை போர்த்தியவர்களா அல்லது நேரடியாக, மறைமுகமாக சங்கீகளுடைய ஆதரவு பெற்றவர்களாக என்று தெரியாமல் சாம்பார், வடை, பாயாசம் என்று பேசுகின்றனர். அறிவு ஆயுதத்தை சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்" என்று கூறினார்.