இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!
நடிகர்-அரசியல்வாதி விஜய் புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியதை தொடர்ந்து, லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகனான சார்லஸ் மார்ட்டின் தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஆவார்
சார்லஸ் மார்ட்டின், தனது ஜே.சி.எம். மக்கள் மன்றத்தை முழுநேர அரசியல் கட்சியாக மாற்றி, அதற்கு இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயரிட்டுள்ளார். இக்கட்சி டிசம்பர் 14 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்.
புதுச்சேரியில் ஆட்சி செய்த அரசுகள் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டிய அவர், 2026 தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருவதே தனது இலக்கு என்று தெரிவித்தார். புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றுவதே தனது நீண்ட கால நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய், பொதுக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியை புகழ்ந்துவிட்டு, பா.ஜ.க.வை விமர்சித்த சூழலில், சார்லஸ் மார்ட்டினின் அரசியல் பிரவேசம் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணிக் கணக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.