பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இந்நிலையில் அன்னாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு .சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.
அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கின்றது என எதிா்க்கட்சித் தலைவா் மேலும் குறிப்பிட்டாா்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாருக்கும் எனக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புக்கள் இனிய நினைவுகளாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க அவர் பாடுபட்டார்.
அன்னாரின் மறைவு இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்களுக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் பாரிய இழப்பாகும் என பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளாா்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எனது நீண்டகால அரசியல் நண்பர். நாங்கள் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
அவரது மறைவு இலங்கை அரசியலின் சகோதரத்துவத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் இழப்பில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீண்டு வருவதற்கு எனது ஆறுதல்களைத் தெரிவிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். அவர் தனது கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்.
இந்த இக்கட்டான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.
தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து மக்களுக்காக தன்னை அரசியலில் ஈடுபடுத்திய பெருமகான் அவர்.
மேலும் தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் மேலும் தொிவித்தாா்.