பிரபாகரன் உயிருடன் இல்லை : 18ஆம் திகதி இறுதி அஞ்சலி!

16.05.2024 14:54:47

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரலாற்றையே மாற்றிப் போடும் நிகழ்வுகள் தற்போது நடைபெற ஆரம்பித்துள்ளதாகவும் யாரோ ஒரு பெண் இங்கு வந்து நான்தான் துவாரகா என அறிவிப்பதுடன், இது போன்ற வரலாற்றை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் எனவும் அவர்கள் உயிருடன் இருப்பதாக யாரும் கூறினால் அவர்களை அழைத்து வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவேளை, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் 14 வருடங்கள் குடும்பத்தை விட்டு விலகியிருக்கமாட்டார் அவர் வேறு எந்த நாட்டிலும் சொகுசு வாழ்க்கை வாழக்கூடியவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு இறுதி இறுதி அஞ்சலி நிகழ்வு ஒன்றை செய்து அவர்கள் தங்களுடைய நாட்டிலேயே இறுதி மூச்சை விட்டதாக உலக மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.