இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும் இந்தியா துணை நிற்கும்!
|
“இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும்” என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
|
|
அவர் தனது முதலாவது இலங்கைக்கான விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (08) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத் துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் சுமார் 4.7 சதவீதமாக இருந்ததாகவும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் அது 10–11 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.45 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் அது ரூ.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மின்னணுப் பொருட்கள் மற்றும் கைப்பேசி உற்பத்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார். மின்னணுப் பொருட்களின் உற்பத்தி ரூ.1.9 லட்சம் கோடியிலிருந்து ரூ.11 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி சுமார் ரூ.38,000 கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்து, 700 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். “இந்தியா தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் இரண்டு உற்பத்தி அலகுகள் மட்டுமே இருந்த நிலையில், இன்று அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாகியுள்ளது. கைப்பேசி உற்பத்தி ரூ.18,000 கோடியிலிருந்து ரூ.5.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கைப்பேசி ஏற்றுமதி கிட்டத்தட்ட 163 மடங்கு அதிகரித்து ரூ.2.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வாகன ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடியிலிருந்து ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளதாகவும், இதில் எட்டு முக்கிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இடம்பெற்றுள்ளதாகவும் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற நான்கு ஒப்பந்தங்கள் மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை “அனைத்து ஒப்பந்தங்களிலும் மிகப்பெரிய ஒப்பந்தம்” (Mother of All Deals) என்று குறிப்பிட்ட அவர், இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான அணுகலை இந்தியாவுக்கு வழங்குவதாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் தூதரக மற்றும் பொருளாதார திறன்களை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் உலகளாவிய நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே முக்கிய காரணம் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், இன்று சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது உலக நாடுகள் அதை கவனித்துக் கேட்கின்றன என்று அவர் கூறினார். மேலும், இரு நாடுகளின் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் இந்திய வம்சாவளியினரை அவர் பாராட்டினார். இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வெறும் ரூ.600 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ததாகவும், தற்போது அது வரலாறு காணாத அளவான சுமார் ரூ.39,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2013-14 நிதியாண்டில் சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு பட்ஜெட், 2025-26 நிதியாண்டில் ரூ.7.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வளர்ச்சி இந்தியாவின் விரிவடைந்து வரும் திறன்களையும், வலுவான மற்றும் தற்சார்பு (ஆத்மநிர்பர்) பாதுகாப்புத் துறையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணத்தையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய தொடக்க நிறுவன (Startup) சூழலமைப்பைக் கொண்டுள்ளதாகவும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது இந்திய இளைஞர்களின் புதுமைச் சிந்தனையையும் தொழில்முனைவுத் துணிச்சலையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை விளக்கிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் “ஒரே நாடு, ஒரே வரி” என்ற நடைமுறை உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தனிநபர் வரி செலுத்துவோருக்கான வரிச்சலுகை நடவடிக்கைகள் அவர்களின் வரிச்சுமையைக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியின் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் திரு. ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையின் சுழற்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வறுமை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 2014ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி மக்களை மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் சென்றடைந்த நிலையில், தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் உள்ளதாக அவர் தெரிவித்தார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். பிராட்பேண்ட் இணைப்பின் விரைவான விரிவாக்கம் மற்றும் UPI-யின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பிற போக்குவரத்து வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய ரயில்வே 100 சதவீத மின்மயமாக்கல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், JAM (Jan Dhan–Aadhaar–Mobile) வலையமைப்பு மற்றும் நேரடி நிதிப் பரிமாற்றம் (DBT) ஆகியவை அரசின் நலத்திட்டப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். DBT மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை ரூ.51 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை அரசின் அமைச்சரவை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேற்கு மாகாண ஆளுநர் ஹனிப் யூசூப், இலங்கை அரசின் பிரதி அமைச்சர் . சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவின் சிரேஷ்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் |