IIT மெட்ராஸ் இயக்குநருக்கு பத்மஶ்ரீ விருது!
|
IT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்ட விவகாரத்தில் கேரள காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு இடையே X தளத்தில் மோதல் வெடித்துள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்த பங்களிப்பை செய்து வருவதற்காக IIT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஶ்ரீ விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை விக்சித் பாரத் 2024(Viksit Bharat 2047) கூட்டு முயற்சி திட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக IIT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி தெரிவித்துள்ளார். |
|
இந்நிலையில் IIT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டதை கிண்டல் செய்து கேரளா காங்கிரஸ் X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2023ம் ஆண்டு பசுவின் சிறுநீரில் (கோமியத்தில்) மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை இருப்பதாகவும், அது குடலுக்கு எரிச்சலூட்டும் நோய்களை குணப்படுத்தும் என கூறி இருந்ததை குறிப்பிட்டு கோமியம் குறித்த உங்களின் சிறந்த ஆராய்ச்சியை நாடு அங்கீகரித்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளது. கேரளா காங்கிரஸின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு, IIT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடியின் தகுதிகளை பட்டியலிட்டு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் IIT மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி மைக்ரோபிராசசர் வடிவமைப்பில் மிகப்பெரிய நிபுணர் என்றும், இந்திய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் பணியாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் மனித உடலுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர் இருப்பதாகவும் அது தொடர்பான ஆராய்ச்சி தவறில்லை என்றும் ஶ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். ஶ்ரீதர் வேம்புவின் பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ள கேரளா காங்கிரஸ், கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும் என்று நீங்கள் நம்பினால், கோடிஸ்வரரான நீங்கள் உங்கள் பணத்தை போட்டு ஆராய்ச்சி செய்து ஏன் அதை நிருபிக்க கூடாது என்று கேட்டுள்ளது. அத்துடன் மத்தியப் பிரதேசத்தில் பஞ்சகவ்யா(பசுவின் 5 பொருட்கள் சேர்ந்த கலவை) மூலம் புற்றுநோய் ஆராய்ச்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ரூ3.5 நிதி ஊழல் குறித்தும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. |