இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்.

17.08.2026 09:07:00

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்ட வி.என்.671 என்ற இலக்கத்தைக் கொண்ட எயார்பஸ் ஏ320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்துக்கு பாரம்பரிய நீர்த்தாரை மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததுடன், அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

 

புதிய நேரடி விமான சேவையின் கீழ் வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலங்கை – வியட்நாம் இடையே விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு விமானப் பயணத்துக்கு சுமார் 4 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய விமான சேவையை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.