இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 100 பில்லியன் டொலரைக் கடக்கும்

13.11.2024 08:07:16

இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம் மிக விரைவில் 100 பில்லியன் டொலரைக் கடக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் 2030க்கு முன்னரே 100 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடக்கும் என வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  

பல்வேறு கட்டமளவிலான சவால்கள் இருப்பினும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் உதவியாய் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவிலும் ரஷ்யாவிலும் உள்ள தொழில்துறையில் பங்கு கொள்ளும் விதமாக மேலும் கூட்டுறவு திட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் கூறினார்.

வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான 25-வது இந்தியா-ரஷ்யா அரசாங்கங்களுக்கு இடையிலான ஆணையத்தில் (IRIGC-TEC) வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனைக் கூறினார்.

அப்போது, இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு இப்போது 66 பில்லியன் டொலருக்கு மேல் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும், “இந்தியாவின் Make in India திட்டத்தில் ரஷ்யாவின் அக்கறையை வரவேற்கிறோம்” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து, உரம், மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற வளங்களை வழங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ள ரஷ்யாவின் பங்களிப்பை இந்தியா வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030-ஆம் ஆண்டளவில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கை நாம் அடைவோம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.