நேபாள விமான விபத்து: 21 உடல்கள் மீட்பு

31.05.2022 16:49:13

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இழந்தோரில், 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், நேற்று முன்தினம், பொகாரா நகரில் இருந்து, இந்தியர்கள் நான்கு பேர் உட்பட, 22 பேருடன் சுற்றுலா தலமான, ஜாம்சம் நோக்கி தாரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த விமானம் மஸ்தாங் மாவட்ட மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானம் பள்ளத்தில் சிதறிக் கிடந்த நிலையில் அதில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே மீட்பு படை வீரர்கள், 21 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விபத்துக்குள்ளான விமானத்தில், இந்தியர்கள் நான்கு பேர், ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த, 13 பேர் பயணம் செய்துள்ளனர்.

நேபாள விமான விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் திரிபாதி, 54, அவரது முன்னாள் மனைவி வைபவி, 51, மகன் தனுஷ், 22, மகள், ரித்திகா,15, ஆகியோர் பரிதாபமாக இறந்துள்ளனர். அசோக் ஒடிசாவிலும், வைபவி, தன் குழந்தைகளுடன் மஹாராஷ்டிர மாநிலம் தானேவிலும் வசித்தனர். கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். எனினும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விபத்தில் சிக்கிக் கொண்டனர். வைபவியின், 80 வயது தாய் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் உள்ளார். அவருக்கு மகள், பேரக்குழந்தைகள் இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை.