கனடா பொதுத்தேர்தல்: 17 இந்திய வம்சாவளியினர் வெற்றி

22.09.2021 15:51:50

கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவின் பிரதமராக 2015 முதல் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். இவர், தன் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளன. காமன்ஸ் சபையில் பெரும்பான்மை பெற இன்னும் 14 இடங்கள் தேவை. எனினும் தற்போதைய கூட்டணியே தொடரும் என்பதால் லிபரல் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங், 40 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஹர்ஜித் சாஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சக்கர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.