நல்லாட்சி அரசின் அரசியலமைப்பு வரைவை அமுல்படுத்த விடமாட்டோம்!

02.01.2026 14:15:00

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த வரைபை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஏனெனில் அந்த வரைவு ஒற்றையாட்சிக்கு முற்றிலும் விரோதமானது. சமஷ்டியாட்சி முறைமைக்கு எக்காலத்திலும் உருவாக்கப்படாதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கைக்கு வருகைத் தந்தால் மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படும். இலங்கையின் உள்ளக விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது.உண்மையில் இது தேவையில்லாத ஒரு விடயமாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு அறிமுகப்படுத்திய மாகாணசபை முறைமை நிர்வாக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

தேர்தல் முறைமை காரணமாக மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.இதனால் எவ்வித பாதிப்பும் சமூக கட்டமைப்பில் ஏற்படவில்லை. ஆகவே மாகாணசபைத் தேர்தல் முறைமையை முழுமையாக இரத்துச் செய்வது பொருத்தமானதாக அமையும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த வரைபை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஏனெனில் அந்த வரைவு ஒற்றையாட்சிக்கு முற்றிலும் விரோதமானது. சமஷ்டியாட்சி முறைமைக்கு எக்காலத்திலும் உருவாக்கப்படாது.

இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றுவதாக தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறிப்பிட்டனர். அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் தேசியத்துக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. ஒற்றையாட்சி மற்றும் தேசியத்துக்கு எதிரான வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்றார்.