இலங்கைக்கு 9 தங்கப் பதக்கம்

05.07.2022 08:55:10

 பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்றாவது சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் இலங்கையிலிருந்து 13 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் 4 ஆண்கள், 9 பெண்கள் அடங்குகின்றனர்.

இவர்களில் 9 பேர் தங்கப் பதக்கத்தையும், 4 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். 

போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாகச் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிலக்சினி கந்தசாமி பெரும் கஷ்டத்துக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியாலும், தொடர் பயிற்சியாலும் சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கனவே பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்ற டிலக்சினி, இன்று சர்வதேச ரீதியிலும் தங்கப் பதக்கத்தை வென்று வடக்கு மாகாணத்துக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி அலகில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.