சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு!
கிழக்கு கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூறாவளி மற்றும் நாடு தழுவிய மின் முடக்கத்திற்கு பல வாரங்களுக்குப் பிறகு, கியூபாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாண்டியாகோ டி கியூபா, ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ போன்ற பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. |
ஜமைக்காவில் உள்ள உள்ளூர் ஊடகங்களும் அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக கியூபாவில் பெரிய சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கியூபாவின் இரண்டாவது பெரிய நகரமான சாண்டியாகோவில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 74 வயது பெண் ஒருவர் தெரிவிக்கையில், நகர மக்கள் தெருக்களில் திரண்டதாகவும், இன்னும் பதற்றத்துடன் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு அதிர்வுகளை உணர்ந்ததாகவும், ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கியூபாவின் மற்றொரு கடினமான சூழலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை, வகை 3 ரஃபேல் சூறாவளி மேற்கு கியூபாவை மொத்தமாக புரட்டிப்போட்டது. பலத்த காற்றுடன் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகும், தீவின் பெரும்பகுதி இன்னும் மின்சாரம் இல்லாமல் போராடிக் கொண்டிருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் தீவு முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது. படிப்படியாகவே பல பகுதிகளில் மின்சாரம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. |