விவசாய நவீனமயப்படுத்தலுக்காக புதிய செயலணி
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்ட, நீர்பாசன, மாகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை இணைத்து தனியார் துறையின் பங்கெடுப்புடன் மேற்படி செயலணியை நிறுவ எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
“விவசாயத்துறை நவீனமயப்படுத்தல்” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய நவீன மயப்படுத்தலுக்கான செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை இரு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்திய ஜனாதிபதி, தேவை ஏற்படுமாயின் அச்செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
விவசாயம் இந்நாட்டு பொருளாதாரத்தின் பிரதான அங்கமாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை அமைச்சு அல்லது சில நிறுவனங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாதெனவும், அரச மற்றும் தனியார் துறைகள் உரிய ஒருங்கிணைப்புடன் விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேபோல் பழமையான முறைமைகளுக்கு மாறாக புதிய முறையில் சிந்தித்து சிறந்த பிரதிபலன்களை அடையும் வகையில், விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதுவரையில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மாத்திரமே இடம்பெற்றதாகவும், அதனால் நாட்டுக்கு எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உரிய முகாமைத்துவத்தின் கீழ் விவசாய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விவசாய அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்கிய ஜனாதிபதி, 9 மாகாணங்களிலும் காணப்படும் வளங்களை அதற்காக பயன்படுத்திக்கொள்வதோடு, அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, உரிய அமைச்சுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், ஏனைய ஆய்வு நிறுவனங்களின் நிபுணத்துவ தெரிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
அந்தந்த போகங்களுக்கு ஏற்ற நெல் வகைகளைப் பயிரிடுதல், குறித்த பயிர்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து அறிவைப் பெறுதல், தரமான விதைகளை கொள்முதல் செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நாடு பூராகவும் உள்ள கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக சிறு விவசாயிகளுக்கு அவசியமான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கும் திட்டத்தை உருவாக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், நவீன விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்யும் தாய்லாந்து போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி விவசாய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு, தனியார் துறை தொழில் முயற்சியாளர்களை உள்ளீர்ப்பதன் மூலம் அதிக நன்மைகளை பெற முடியும் என்பதுடன், நிலையான விவசாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடையும் வகையில் இந்த பணிகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், முறையான நீர் முகாமைத்துவத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய பயிர்களை கிராமப்புற ரீதியில் ஊக்குவித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளை தெளிவூட்டல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும் ஆலோசணைகளையும் முன்வைத்தனர்.