கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
|
கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. ஏற்கெனவே தன் தரப்பு வாதங்களை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார். |
|
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் முன்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது என்றும், அமைச்சராக இருந்த கே.என்.நேருவை பாதுகாப்பதில் திமுக மிகவும் உறுதியாக இருந்தது என்றும் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழக அரசின் வாதத்தி ஏற்று கே.என்.நேருவின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சொன்ன நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (02-11-26) உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் கிடையாது. சம்பந்தப்பட்ட அந்த துறையின் அமைச்சர் நீங்கள். அப்படி இருக்கும் பொழுது அந்த துறையில் நடந்ததாக சொல்லப்படும் மிகப்பெரிய முறைகேடு வழக்கில் நீங்கள் விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்’ என்று கூறி கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். |