இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது!

01.06.2026 08:38:44

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுவது உண்மையா அல்லது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுவது உண்மையா, ரில்வின் சில்வா குறிப்பிடுவது தான் உண்மை ஏனெனில் இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

   

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் தற்போது மாத இறுதியில் அச்சத்துடன் தான் வாழ்கிறார்கள். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை குறிப்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது.

அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தேவையில்லை புறக்கோட்டை மொத்த விற்பனை வியாபாரிகளுக்கு விலையை அதிகரிக்க முடியும். அரசாங்கம் தேவையில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கங்கள் வெளியக காரணிகளால் நெருக்கடிக்குள்ளான போது ஜே.வி.பியினர் அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று பாடம் கற்பிப்பார்கள் ஆனால் இன்று அவர்கள் சர்வதேச நாணய நிதியம் கற்பிக்கும் பாடத்துக்கு அமைவாகவே செயற்படுகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கான ஒட்டுமொத்த மக்களும் கடனாளியாக்கப்படுகிறார்கள்.நாணய நிதியத்தின் கட்டளைக்கு அமைவாகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.அதற்கு தேர்தலை நடத்த வேண்டும்.மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். அவரது கருத்துக்கு முரணாக அமைச்சரவை நளிந்த ஜயதிஸ்ஸ மாகாணசபைத் தேர்தல் நடக்கும், தேர்தலுக்கு நிதி நெருக்கடி ஏதுமில்லை என்று குறிப்பிடுகிறார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் யார் குறிப்பிடுவது உண்மை என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.ரில்வின் சில்வா குறிப்பிடுவது தான் உண்மை என்று நாங்கள் குறிப்பிடுறோம். அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது. அவ்வாறு நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் எல்லை நிர்ணய விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை தொடரச்சியாக பிற்போடும் என்றார்.