பொது வேட்பாளரால் வெற்றிக்குப் பாதிப்பு

25.08.2024 09:34:33

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகவும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்குளுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோர் என தமிழ் பொதுக்கட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். அவரை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள், அதற்கு மறுதினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் அழைப்புக்கு இணங்க அவரை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குக் கிடைக்கக்கூடிய தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடித்து, தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருப்பினும் இம்முறை தாம் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்திய தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதிலிருந்து பின்வாங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளனர்.