இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்!

13.11.2024 07:53:16

கனடாவில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் பணக்காரர் யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம். பிரேம் வாட்சா (Prem Watsa), கனடாவின் பணக்கார இந்தியராகவும், கனடாவில் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்தவராகவும் விளங்குகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய பணமதிப்பில் ரூ.17,750 கோடி) ஆகும்.

  

இருப்பினும், முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி போன்ற இந்தியாவின் மிகப்பாரிய தொழிலதிபர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை. எனினும், கனடாவில் பிரேம் வாட்சா தனக்கென்று தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளார்.

ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாட்சா, 1971-ல் இந்தியாவின் ஐஐடி மட்ராஸ் நிறுவனத்தில் கேமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.

மேம்பட்ட கல்வி வாய்ப்புகளை நோக்கி கனடாவுக்கு சென்ற அவர், அங்கு மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்சாட்மினிஸ்ட்ரேசன் (MBA) படித்தார். இந்த கல்வி அடிப்படையிலேயே அவரது தொழில் வாழ்க்கை முன்னேறியது.

1974ல் கான்ஃபெடரேஷன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றும் வாய்ப்பால் நிதித் துறையில் வாட்சாவின் பயணமானது துவங்கியது.

அங்கு பங்குச் சந்தைப் பராமரிப்பிலும் முதலீட்டு ஆய்விலும் ஈடுபட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு Hamblin Watsa Investment Counsel Ltd., என்ற நிறுவனம் தொடங்கி முதலீட்டு மேலாண்மையில் கவனம் செலுத்தினார்.

1985ல், ரொறன்ரோவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Fairfax Financial Holdings நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அவரது முதன்மை தொழில் பயணமானது துவங்கியது.

அவரது தலைமைக்கீழ் Fairfax நிறுவனம் வெகுவாக வளர்ச்சி பெற்றது. அதன் மதிப்பு 31 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, ஆண்டிற்கு சுமார் 20% மகசூல் வழங்கும் நிலையை அடைந்தது.

ரொறன்ரோ பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேர்ஃபேக்ஸ் ஃபினான்ஷியல் ஹோல்டிங்ஸ் கனடாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்சாவின் முதலீட்டு திறமை காரணமாக அவருக்கு Canadian Warren Buffet எனப் பெயர் வந்தது.

கனடாவில் வெற்றிகரமாக விளங்கும் வாட்சா, இந்தியாவிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை அங்கீகரிக்க, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (Padma Shri award) வழங்கப்பட்டது.

இவரது செல்வம் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்புகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லையென்றாலும், அவரது வெற்றிக் கதை தொழில் மற்றும் கல்வியில் உறுதிகொண்ட ஒருவருக்கு என்ன வகையில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது.