முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு ! - சட்டப்பேரவைத் தேர்தல்

09.03.2021 07:46:28

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்கப்படும் எனத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால்  தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. அதன்படி 4 இலட்சத்து 79 ஆயிரத்து  892 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

234 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகத்தில் 76 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் பதற்றமான சாவடிகள் குறித்து கணக்கெடுக்கப்படும்.

மேலும்  ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் நிலைக் குழுக்களும் பறக்கும் படைக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் தோ்தல் துறையால் கண்காணிக்கப்படும்.

இந்தக் குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.  அத்துடன் வாக்குச் சாவடியில் சமூக இடைவெளி கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்படும். மேலும்  முகக் கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தல் திகதி  அறிவிப்பு காரணமாக  நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால்  வாகனச் சோதனைகள் கண்டிப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.