முறையான மீளாய்வுகளின் பின்னரே கல்விச் சீர்திருத்தம்.
|
நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவசரமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக முறையான மீளாய்வுகளின் பின்னரே அதனை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. |
|
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் தருணத்தில், முதலாம் தரத்திற்கு புதிதாக இணையும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்களது காலத்தைப் போன்றதொரு கல்விப் புரட்சியை இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சங்கத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள போதிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெற்றோர் பெரும் நிதிச் சுமைக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. ஆறாம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்த போதிலும், முறையான மீளாய்வு மற்றும் கலந்துரையாடல்களின் பின்னரே அதனை முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இதனை அவசரமாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அவர் தெரிவித்த கருத்தை நாம் வரவேற்கிறோம். மக்களின் குரலுக்கும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிப்பது ஒரு ஜனநாயகப் பண்பாகும். தொழிற்சங்கங்கள் என்பவை வெறும் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புக்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் நலனுக்காகவும் பாடுபடுபவை. குறிப்பாக, 1ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை ஆரம்பிக்கவும், 6ஆம் தரத்திற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி மீளாய்வு செய்யவும் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. கல்விச் சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்காக கல்விப் நிர்வாக சேவை, அதிபர்-ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு நிபுணர் குழுவை நியமிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்னரே மேலதிக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். |