ரணிலை மக்கள் தெரிவு செய்யமாட்டார்கள்

17.09.2024 07:43:49

ரணில் விக்கிரமசிங்கவை அரச தலைவராக நாட்டு மக்கள் ஒருபோதும் தெரிவு செய்ய போவதில்லை. சஜித் பிரேமதாசவிடம் எவ்வித கொள்கையும் கிடையாது. வில்பத்து வனத்தை அழித்தவரும், அதை எதிர்த்து முறைப்பாடளித்தவரும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் இவரால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

   

மொனராகலை பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நாடு முழுவதும் இடம்பெறுகிறது. எத்தனை கூட்டங்களை நடத்தினாலும் ரணில் விக்கிரமசிங்கவால் வெற்றிப் பெற முடியாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாக நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக புறக்கணித்தார்கள்.

தேசியத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார்கள். பதவியை எவ்வழியிலாவது பெற்றுக் கொள்ள நாட்டுக்கு எதிரான அரசியலமைப்iபை இயற்ற முயற்சிக்கிறார்.

தேசிய வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பது அவரது பிரதான பொருளாதார கொள்கை இதனை தவிர்த்து தேசியத்துக்கு இணக்கமான எவ்வித திட்டங்களும் அவரிடம் கிடையாது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவிடம் தேசியத்தை எதிர்பார்க்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாகவுள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்று குறிப்பிடுகிறார்.

பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே எமது இனம் பாதுகாக்கப்படும்.ஆகவே எதிர்கால தலைமுறையினருக்காக பௌத்த சாசனத்தை அரச அதிகாரத்துடன் பாதுகாக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசவை பற்றி பேசி பயனில்லை. அரசியலுக்காக வருபவர்கள் அனைத்தையும் இணைத்துக் கொள்கிறார். எவ்வித கொள்கையும் கிடையாது.

வில்பத்து வனத்தை அழித்த அரசியல்வாதியும், அந்த அரசியல்வாதிக்கு எதிராக முறைப்பாடு செய்த பௌத்த தேரரும் சஜித் அணியில் தான் உள்ளார்கள். இவ்வாறு அடிப்படை கொள்கையில்லாதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிப்பார். சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பார்.

தேசியத்துக்கும், பௌத்த முன்னுரிமை கொடுக்கும் சிறந்த தலைவரை வேட்பாளரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்களித்து தேசியத்தை பாதுகாக்கும் பொறுப்பில் ஒட்டுமொத்த பங்காளர்களாக வேண்டும் என்றார்.